மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நேற்று ஐந்தாவது நாளாக பகல் பத்து உற்சவம் நடந்தது.கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு சுயம்பு வடிவில் அரங்கநாதப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, இக்கோவிலில் பகல் பத்து உற்சவம் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் பகல் பத்து உற்சவத்தில், அரங்கநாதப் பெருமாள் முன்பு, கோவில் ஸ்தலத்தார் மற்றும் அர்ச்சகர்கள் திவ்யபிரபந்தங்கள் வாசித்து வருகின்றனர். நேற்று ஐந்தாம் நாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அரங்கநாதப் பெருமாள் கோவிலின் உள்ளே வலம் வந்து, ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார்.