பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
திருவனந்தபுரம்: எடத்துவா தூய ஜார்ஜியார் திருத்தல திருவிழா வரும் 27ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கேரளாவில் புகழ்பெற்ற எடத்துவா திருத்தலம் ஆலப்புழை மாவட்டம் குட்டைநாடு தாலுகாவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த தேவாலய திருவிழா வரும் 27ம் தேதி துவங்கி மே 14ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் திருவிழாவில் காலை 7.30 மணிக்கு திருத்தல அதிபர் குரியன் புத்தன்புரா தலைமையில் திருக்கொடியேற்றம், சங்கனாசேரி உயர் மறைமாவட்ட முதன்மை பணியாளர் மேத்யூ வெள்ளானிக்கல் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது.
விழா நாட்களில் காலை, மதியம், மாலை வேளைகளில் நவநாள், திருப்புகழ்மாலை, தமிழ், மலையாள திருப்பலிகள் நடக்கிறது. ஆறாம் நாள் காலை மாவேலிக்கரை மறைமாவட்ட பிஷப் ஜேஷ்வா மார் இக்னாத்தியுஸ் தலைமையில் திருப்பலி, ஏழாம் நாள் காலை புனிதரின் திருச்சொரூபம் ஆலயத்தில் அர்ச்சிப்பு, எட்டு மற்றும் ஒன்பதாம் நாட்களில் இரவு வடக்கன்குளம் இவான்ஸ் குழுவினரின் நற்செய்தி பெருவிழா, 10ம் நாள் மாலை கோட்டார் மறைமாவட்ட பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, திருப்பவனி நடக்கிறது.
11ம் நாள் காலை தக்கலை மறைமாவட்ட பரிபாலகர் பிலிப் கொடியந்தரா தலைமையில் திருப்பலி, மாலை திருப்பவனி, 18ம் நாள் காலை ஆடம்பர பெருந்திருப்பலி, மாலை குருசடி நோக்கி திருப்பவனி, திருக்கொடியிறக்கம், திருச்சொரூபம் வாசலில் அர்ச்சிப்பு ஆகியன நடக்கிறது. ஏற்பாடுகளை திருத்தல அதிபர் குரியன் புத்தன்புரா தலைமையில் திருவிழாக்குழு செய்து வருகிறது.