பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
உடன்குடி: உடன்குடி அருகே தாண்டவன்காடு ஆதிநாராயண சுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
தாண்டவன்காடு ஆதிநாராயணசுவாமி (இராஜாங்கோயில்) அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் புதிய கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடக்கிறது. இவ்விழா கடந்த 23ம் தேதி காலை அனுக்ஞை தேவதா அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை துவக்கமும், ஆச்சார்ய விசேஷ சந்திபூஜை, பாவனா அபிஷேகம், பஞ்சகவ்யபூஜை, பூதசுத்தி ஆலய பிரதஷ்ணம், வேதிகார்ச்சனை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், ஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி தீபாராதனையும், மாலை யில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இரவு சமயசொற்பொழிவும், தொடர்ந்து சுக்கிரஹோரையில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் யந்த்ரஸ்தாபனம், ரத்னந்யாசம், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல்ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று(25ம் தேதி) காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எழுந்தருளி விமான கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து மஹாகணபதி, மூலஸ்தானம் ஆதிநாராயண சுவாமி, குருநாதசுவாமி, பத்திரகாளி அம்பாள், குலசேகரராஜா, குலசேகரவள்ளி, ஐயன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
பகல் 11 மணிக்கு சகல திரவ்யங்களால் மஹாஅபிஷேகமும், பகல் 11.45 மணிக்கு மஹேஸ்வர பூஜையும், மாலை 5 மணி திருக்கல்யாணம், மாலை 6 மணிக்கு சகஸ்ரநாமார்ச்சனையும், மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், புஷ்பாஞ்சலி அலங்கார பூஜையும், இரவு 8 மணிக்கு ஆதிநாராயணசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பிரகார உலாவும், இரவு 9 மணிக்கு திரைப்பட கச்சேரியும் நடக்கிறது.
நாளை (26ம் தேதி) மண்டல பூஜை துவங்கி ஜூன் 12ம் தேதி முடிவடைகிறது. ஏற்பாடுகளை ஆதிநாராயணசுவாமி கோயில் மஹாகும்பாபிஷேக திருப்பணிக்குழு மற்றும் தாண்டவன்காடு ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.