பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், 29ம் ஆண்டு சித்திரை மாத அக்னி நட்சத்திர மஹாபிஷேக அன்னதான விழா மே, 10ம் தேதி துவங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முருகனுக்கு சப்தநதித் தீர்த்தம் மற்றும், 1,008 கலசங்களில் சிரகிரி வேலரின் திருவருள் சத்தியை நிலை நிறுத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது. மே, 10ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை இவ்விழா நடக்கிறது. 10ம் தேதி மாலை 4 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள இடும்பனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடக்கிறது.
12ம் தேதி காலை 5 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி கிரி சுற்றி வருதல், 7 மணிக்கு மலைக்கோவில் கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு சகஸ்ர கலசங்கள் ஸ்தாபனம், வேதிகார்ச்சனை, முதல் கால யாக வேள்வி ஆரம்பம், தீபாராதனை நடக்கிறது.
வரும், 13ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, திரவ்யாகுதி, தீபாராதனை நடக்கிறது. காலை, 10.30 மணிக்கு மஹாபிஷேகம் மற்றும் சகஸ்ர கலச அபிஷேகம் நடக்கிறது. 12 மணிக்கு மஹா தீபாராதனையும், நண்பகல் 1 மணிக்கு உற்சவமூர்த்தி புறப்பாடும், அன்னதானம் நடக்கிறது.
காவடி எடுக்கும் பக்தர்களும், பவானி தீர்த்தம் வரும் பக்தர்களும் மே, 11ம் தேதி மதியம், 1 மணிக்கு சென்னிமலை மாரியம்மன் கோவிலுக்கு வந்து சேரவேண்டும் என, அக்னி நட்சத்திர அன்னதான விழா வழிபாட்டு மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.