பசுவந்தனை கைலாசநாதர் கோயிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2012 11:04
பசுவந்தனை: பசுவந்தனை கைலாசநாதர் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 3ம் தேதி நடக்கிறது. கயத்தாறை ஆண்டுவந்த மன்னனின் பசு கூட்டங்கள் ஆளுகைக்கு உட்பட பகுதிகளில் புல் மேய்வது வழக்கம். பசு கூட்டத்தில் ஒரு பசு மட்டும் தனித்து சென்று அங்கிருந்து குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருக்கும் சிவலிங்கத்தை தரிசித்து பாலை தானாக சொறிந்து பாலபிஷேகம் செய்துவிட்டு பின்னர் கூட்டத்தில் வந்து சேர்ந்துவிடுவது வழக்கம். பால் குறைவதை கண்ட மன்னன் காவலாளிகள் மூலம் உண்மையை அறிந்து பால் சொறிந்த இடத்தில் உள்ள சிவலிங்கத்தை கண்டு பணிந்து வணங்கினார். இரவு அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் லிங்கத்தை அர்சித்து வழிபடுவதை கண்டதும், சிவலிங்கத்திற்கு அந்த இடத்தில் ஒரு ஆலயம் ஒன்றை அமைத்து கைலாயத்தினர் வழிபட்டதினால் கைலாசநாதர் என்றும், அம்மனுக்கு ஆனந்தவல்லி எனவும் பெயர் சூட்டி, கோயிலை சுற்றிலும் நான்கு வீதிகளோடு நகரம் அமைத்து பசு வந்து தானாக பால் சொறிந்து வழிபட்டதால் அந்நகரத்திற்கு பசுவந்தனை என பெயர்சூட்டினான். சுவாமிக்கும் அம்மனுக்கும் நடுவில் பாலமுருகன் சோமாஸ்கந்தராக வீற்றிருந்து செவ்வாய் தோசங்களை நீக்குவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்லக்கு மற்றும் பூங்கோயில் சப்பரங்களில் சுவாமி அம்மன் ரதபவனி நடக்கிறது. வரும் 3ம் தேதி திருவிழா அன்று காலை சிறப்பு பூஜைகளுடன் விழா ஆரம்பிக்கப்பட்டு 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரி விழாவும், தொடர்ந்து 5ம் தேதி இரவு சுவாமி அம்மன் திருக்கல்யாண வைபோகமும் நடக்கிறது.