விழுப்புரம் : வைகுண்ட ஏகாதசியையொட்டி, விழுப்புரத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அதனையொட்டி, விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசர் பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 5:00 மணிக்கு பரமபதவாசல் எனப்படும், சொர்க்கவாசல் வழியாக பெருமாள், கோவிலைச் சுற்றி வலம் வந்து, வசந்த மண்டபத்தில் அருள்பாலித்தார். பின்னர், பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில், விழுப்புரம் நகரம் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்ற, விழுப்புரம், எடத்தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள பெருமாள் வைகுண்ட ஏகாதசியை யொட்டி, ஸ்ரீ லட்சுமி நாராயணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.