பதிவு செய்த நாள்
07
ஜன
2020
11:01
மோகனூர்: மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு, கிருத்திகையன்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். அதன்படி, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மற்றும் 11:00 மணிக்கு, திருமஞ்சனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமன பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நாமக்கல், காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மூலவர் பாலதண்டாயுதபாணி தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார்.
நாமக்கல், பொன்விழா நகர், முத்துமாரியன்கோவில் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் வலம்வந்து சுவாமி அருள்பாலித்தார்.
நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்கவசத்தில் சுவாமி காட்சியளித்தார்.
சேந்தமங்கலம் அடுத்த தத்தகிரி முருகன் கோவிலில், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.