தஞ்சாவூர்: காவிரி ஆற்றங்கரையில், சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின், 179வது ஆராதனையை முன்னிட்டு, பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடியும், இசைத்தும் நுாற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், காவிரி கரையில், பகுளபஞ்சமி நாளில், முக்தி அடைந்தார். அவரது சமாதியில், ஆண்டுதோறும், ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா, 3ம் தேதி துவங்கியது. தினமும் காலை முதல் இரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆராதனை நிறைவு நாளான நேற்று அதிகாலை, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்துமேளதாளங்கள் முழங்க, உஞ்சவிருத்தி ஊர்வலம் நடைபெற்றது. தியாகராஜர் சுவாமிகளின் சன்னிதியில், பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், கடலுார் ஜனனி, பின்னி கிருஷ்ணகுமார், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், சீர்காழி சிவசிதம்பரம் உட்பட பல நுாறு இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இசைக் கருவிகளை இசைத்து, ஸ்ரீதியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். இரவில், சுவாமி வீதியுலாவுடன் விழா நிறைவு பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், நேற்று சத்குரு ஸ்ரீ தியாகராஜரின், 179வது ஆராதனை விழாவில்,ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன, கீர்த்தனைகளை, பாடியும், இசைத்தும் இசையஞ்சலி செலுத்தினர்.