காஞ்சிபுரத்தில் மழை கொட்டியும் வறண்ட கோவில் குளங்கள்
பதிவு செய்த நாள்
08
ஜன 2026 10:01
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் வறண்டுள்ளன. மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்புகளை, மாநகராட்சி பராமரிக்காததே காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத்துறை மீது பழிபோடுகிறது. நடப்பாண்டில் வடகிழக்கு பருவ மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால், நகரங்கள் எல்லாம் சில நாட்கள் தண்ணீரில் திணறின. இந்த பருவ மழை காலத்தில், 30 செ.மீ., மழை பெய்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஊரரெல்லாம் வெள்ளம் தேங்கிய நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள கோவில் குளங்கள், பொது குளங்களுக்கு மட்டும் ஏனோ தண்ணீர் செல்லவில்லை. பெரும்பாலான குளங்கள் குறிப்பாக, கோவில் குளங்கள் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டுள்ளன. நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லும் கால்வாய்களை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததே காரணம் என, காஞ்சிபுரம் நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர மக்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பராமரிப்பில் உள்ள மங்கள தீர்த்த குளம்,2018ம் ஆண்டில், ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ், 11.85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில்களில் உள்ள குளங்கள், பல லட்சம் ரூபாய் செலவில் அடுத்தடுத்து சீரமைக்கப்பட்டன. ஆனால், இந்த குளங்களுக்கு நீர்வரத்து கல்வாய்களை முறையாக துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முன்வராததால், குளங்கள் வறண்டுள்ளன. மாநகராட்சி எந்த அளவில் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. இனியாவது மாநகராட்சி நிர்வாகம், நிலத்தடி நீர் ஆதாரங்களை துார்வாரி, நீர் வரத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி கூறியதாவது: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் குளத்திற்கு மழைநீர் செல்லும் பழைய கால்வாய், மண்ணில் புதைந்து இருந்தது. அதை கண்டறிந்து, மழைநீர் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்துள்ளோம். நகரில் உள்ள பிற குளங்களுக்கு, மழைநீர் செல்லும் பெரும்பாலான கால்வாய்கள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கால்வாய்களை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை; மாநகராட்சி சார்பில் சீரமைக்க அனுமதி தரவில்லை. இதுவே, கோவில் குளங்கள் வறண்டதற்கு காரணம். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
|