பதிவு செய்த நாள்
07
ஜன
2020
11:01
நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நாமக்கல், அரங்கநாதர் கோவில், குடவறைக் கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. கார்க்கோடகன் மீது அனந்த சயன நிலையில் ரங்கநாதர் காட்சியளிக்கிறார். வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்து திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் சொர்க்கவாசல் கதவுகளை திறந்து வைத்தனர். முதலில் சுவாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், ரங்கா, கோவிந்தா என, கோஷம் எழுப்பியவாறு தரிசனம் செய்தனர். இரவு, 11:00 மணிவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரங்கநாதரை வழிபட்டனர். 45 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. எஸ்.பி., அருளசு, சப்- கலெக்டர் கோட்டைக்குமார், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
ராசிபுரம், மேட்டுத்தெருவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசித்தனர். தொடர்ந்து, ராசிபுரம் ஜனகல்யாண் இயக்கம் சார்பில், பக்தர்களுக்கு, 50 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதேபோல், ஆர். புதுப்பாளையம் கரிய பெருமாள், பட்டணம் கரிய பெருமாள், நாமகிரிப்பேட்டை வேணுகோபால் சுவாமி, கடந்தப்பட்டி பொன்வரதராஜ பெருமாள், திருச்செங்கோடு,ப.வேலூர், குமார பாளையம், பள்ளிபாளையம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது.