பதிவு செய்த நாள்
07
ஜன
2020
11:01
லகிரி மாவட்டத்தில் வாழும் படுக்கை சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா நேற்று துவங்கியது.ஒரு மாதத்திற்கு முன்பு சக்கலாத்தி என்ற பண்டிகை முதல் விரதம் இருந்து வரும் பக்தர்கள், நேற்று காலை மடிமனை அக்கமணி கோவிலுக்கு, வண்ண குடைகளின் கீழ் அம்மனுக்கு உரித்தான செங்கோல் எடுத்து, பாரம்பரிய உடையுடன் ஊர்வலமாக சென்றனர்.பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கிராம கோவிலில் இருந்து, மடிமனைக்கு செல்லும் பக்தர்கள், வீட்டிற்கு திரும்பாமல், ஒரு வாரம் அங்கேயே விரதம் மேற்கொள்கின்றனர்.அங்கு, நாள்தோறும் இரவு கத்திகை எனப்படும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா ஹெத்தையம்மன் சுத்தக்கல் பகுதியில், திருவிழா கோலாகலமாக நடந்தது.பழமை வாய்ந்த பேரகணி ஹெத்தையம்மன் செங்கோல் பக்தர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அருள்வாக்கு நிகழ்ச்சியுடன், அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மடிமனையில் நாளை (8ம் தேதி) விழா நடக்கிறது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்கின்றனர். வரும் வெள்ளிக்கிழமை இருப்புகல் மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் விழா நடக்கிறது. அங்கு அருள்வாக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.முக்கிய திருவிழா நாளான, 12ம் தேதி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், சின்னகுன்னூர், எப்பநாடு மற்றும் பெப்பேன் ஆகிய கிராமங்களில், திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவை ஒட்டி, படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்கள், விழாக்கோலம் பூண்டுள்ளன.