பதிவு செய்த நாள்
07
ஜன
2020
12:01
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
108 வைணவ தலங்களில் ஒன்றான இங்கு நேற்று அதிகாலை 3:30 மணியளவில் கோயிலில், பெரிய பெருமாள் மற்றும் ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனர். காலை 6:15 மணியளவில் சொர்க்கவாசல் மண்டபத்திற்கு ஆழ்வார்கள் எழுந்தருளினர். 6:24 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, முதலில் பெரியபெருமாளும், தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னார் தம்பதி சமேதராக எழுந்தருளினர்.
ஆழ்வார்கள் எதிர்கொண்டு அழைத்து மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் எழுந்தருளினர்.அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பத்தி உலாவுதல், அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தகோஷ்டி நடந்தது. மாலை 3:30 மணியளவில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆஸ்தானம் வந்தடைந்தனர். விழாவில் சடகோபராமானுஜ ஜீயர், டி.ஐ.ஜி., ஆனிவிஜயா, தக்கார் ரவிசந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் இளங்கோ பங்கேற்றனர். டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராப்பத்து உற்ஸவம் துவக்கம் நேற்று முதல் ஜன.16 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, மாடவீதி வழியாக பெரியபெருமாள் சன்னதி வந்தடைகிறார். அங்கு திருமஞ்சனம், கைத்தலசேவை, அரையர் வியாக்யானம், பஞ்சாங்கம் வாசித்தல் நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானம் வந்தடைவார்.