கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி பாதுகாப்பு முறைகளில் மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2012 10:04
தேனி: கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரள போலீசாருக்கு இணையான எண்ணிக்கையில் தமிழக போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். சித்ரா பவுர்ணமி விழா மே 6 (ஞாயிறு) நடக்கிறது. கண்ணகி கோவில் வளாகத்தில் தமிழக, கேரள பக்தர்கள் தனித்தனியே பூஜை செய்ய உள்ளனர்.
பிரச்னை : இரு மாநில பக்தர்களும் பங்கேற்பதால் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. விழாவை பயன்படுத்தி தமிழக நக்சலைட்களும் ஊடுருவ வாய்ப்புள்ளது என, கேரள உளவுப் போலீசார் அம்மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். கேரள போலீசார் தமிழக பக்தர்களை ஒரு விதமாகவும், கேரள பக்தர்களை ஒரு விதமாகவும் நடத்துவதால், பக்தர்கள் அதிருப்தியடைந்து பிரச்னை வரும் வாய்ப்புள்ளதாக தமிழக உளவுப்போலீசாரும் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் எந்தெந்த பகுதியில் எத்தனை போலீசார் நிறுத்தப்பட உள்ளனர் என்பதை, இரு மாநில அதிகாரிகளும் பேசி முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் கேரள போலீசார் எத்தனை பேர் நியமிக்கப்பட உள்ளனரோ அதே எண்ணிக்கையில் தமிழக போலீசாரும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.