பதிவு செய்த நாள்
09
ஜன
2020
11:01
நீராலும் பசுமை நிறைந்த வயல்களாலும் சூழப்பட்ட மையப்பகுதியில், குடிகொண்டுள்ள கொண்டத்து காளியம்மனை, பாரியூர் அம்மன் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
மகிஷாசுரனை வதம் செய்து, அமைதியாகி, சாந்தரூபமாக, பாரியூரில் கொண்டத்து காளியம்மன் காட்சி தருகிறாள். அம்பாளின் முகம் சிரித்த முகம், பக்தர்கள் வேண்டுவதை வரமாக அள்ளித்தரும் வல்லமை கொண்டாக திகழ்கிறது. வலது காலை மடித்து, இடக்காலை தொங்க விட்டிருக்கிறாள். மகிஷாசுரனின் தலையை, அம்மனின் இடது கால் பூமியில் அழுத்தியிருக்கிறது. தேவியின் வலக்கை ஏந்தியிருக்கும் சூலாயுதம், அவனது மார்பை துளைக்கிறது. அஷ்டகரம் உடையவளாய், தலையில் அக்னி கிரீடத்துடன் அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னையின் எட்டு கரங்களிலும், எட்டுவித பொருட்கள் குடி கொண்டுள்ளன. வலப்புற நான்கு கரங்களில், மேலிருந்து கீழாக, சூலாயுதம், டமாரம், கத்தி, கிளி வடிவில் வேதாளம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. இடப்புற நான்கு கரங்களில், மேலிருந்து கீழாக அக்னிசட்டி, கேடயம், மணி, கபாலம் உள்ளது. அன்னையின் திருவுருவத்தை அப்படியே வர்ணிக்கும் ஸ்லோகம் உள்ளது. ஜூவாலையை தலையில் ஏந்தி, சிவப்பு நிற ஆடை அணிந்து, எட்டு கரங்களிலும், எட்டு விதமான பொருட்களையும் கொண்ட சாமுண்டீஸ்வரியே, உனது விஸ்வரூப தரிசனத்தை கண்டு உலகமே நடுங்குகிறது. பத்ரகாளியே உன்னை வணங்குகிறேன் என பொருள்படும்படி, ஸ்லோகம் இயற்றப்பட்டுள்ளது.
விபூதிக்கு பதில் திருநீறு மண்: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பக்தர்களுக்கு விபூதியாக திருநீறு மண் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான தேர்வீதியில், காலங்காலமாக, திருநீறு மண் எடுக்கப்படுகிறது. இன்று நடக்கும் விழாவில், ?0 ஆயிரம் பக்தர்கள் தீ மிதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தனை பக்தர்களுக்கும் விபூதி வழங்க, தேர்வீதியில் இருந்து ஒன்றரை யூனிட் மண் எடுக்கப்பட்டது. சலித்து சுத்தம் செய்து, உலர வைத்து, ஆகம விதிப்படி, பூஜித்து வைக்கப்பட்டுள்ளது. தீ மிதிக்கும் பக்தர்களுக்கு, திருநீறு மண் வழங்கப்படும்.
தினமும் ஆறு கால பூஜைகள்: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், தினமும் காலை, 6:00 மணிக்கு விளா பூஜை, 9:00 மணிக்கு சந்தி பூஜை, 10:30 மணிக்கு சிறுகாலை சந்தி பூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, 5:00 மணிக்கு மாலை பூஜை, இரவு, 7:00 மணிக்கு அர்த்த சாம பூஜை என ஆறு கால பூஜை நடக்கிறது.