பதிவு செய்த நாள்
09
ஜன
2020
12:01
மதுரை: தினமலர் வாசகர்களுக்காகவும், நாடு செழிக்கவும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நாளை (ஜன.10) காலை 10.00 - 10.30மணிக்கு கோபூஜை நடைபெறுகிறது. கோ பூஜையில் பங்கேற்பதால் லட்சுமி கடாட்சம், தொழிலில் லாபம், மனபலம், உடல் நலம், தர்ம சிந்தனை, திருமணம், குழந்தைப்பேறு கைகூடும்.
கோபூஜை நடத்துவது ஏன்?: தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு அம்மாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். உயிரோடு இருக்கும் வரை பால் கொடுத்து உதவும் பசு தான் அது. அன்பும், சாந்தமும் கொண்ட பசுவைக் கண்டால் நம் தாய் போல அன்பும், கருணையும் மனதில் ஊற்றெடுக்கும். வாயில்லா ஜீவனாக இருந்தாலும் மற்ற பிராணிக்கு இல்லாத சிறப்பாக பசு மட்டுமே ‘அம்மா’ என அடி வயிற்றில் இருந்து குரல் எழுப்பும். குழந்தையாக இருந்த போது மட்டுமே தாய் பாலுாட்டுகிறாள். ஆனால் பசுவோ நம் வாழ்நாள் முழுக்க பால் தருகிறது, பசுவின் குளம்படி பட்ட புழுதியை ‘கோதுாளி’ என்பர். பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது புழுதிப்படலம் கிளம்பும்.
அது நம் உடம்பில் பட்டாலே முன்வினை பாவம் தீரும். புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும். மாடுகளுக்கு கீரை கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது. ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து இருந்தால் திருமணத்தடை, ஒற்றுமையின்மை போன்ற பிரச்னை ஏற்படும். இவர்கள் தினமும் மாடுகளுக்கு அகத்திக்கீரை, பசும்புல் கொடுப்பது அவசியம்.
‘‘காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே!
எல்லோருக்கும் நன்மை தருபவளே!
பரிசுத்தமானவளே! புண்ணியம் மிக்கவளே!
மூவுலகிற்கும் தாயாகத் திகழ்பவளே!
இந்த புல்லை உண்டு மகிழ்வாயாக!
பசுத்தாயே! உன் மேனி முழுவதும் எல்லா உலகங்களும் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த பூலோகத்திலும், பரலோகத்திலும் எனக்கு மங்களத்தை அருள்வாயாக’’ என பிரார்த்தித்து கொடுப்பது நல்லது. சிவபெருமானை ‘அபிஷேகப் பிரியர்’ என்பர். ருத்ர சமகம் என்னும் மந்திரம் ஜபித்து, பசுவின் கொம்பு வழியாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்.
இதில் பால் மட்டுமின்றி ‘பஞ்ச கவ்யம்’ என்னும் பால், தயிர், நெய், பசு மூத்திரம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் கொம்பு மூலமாக சிவனுக்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். ‘எங்கெல்லாம் பசுக்கள் துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டு இருக்கிறதோ அங்கு பாவம் நீங்கி நாடு ஒளி பெறும்’. ‘அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கடவுள் அருள் புரியட்டும்’ எனக் காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார். இதனடிப்படையில் தான் கோயில்களில் கோபூஜை தினமும் நடத்தப்படுகிறது. நாடு செழிக்க பசுக்களை நேசிப்போம்.