பதிவு செய்த நாள்
10
ஜன
2020
10:01
உத்தரகோசமங்கை: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, உத்தரகோசமங்கை மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரிங்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோயில், மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற சிவாலயம். இந்த கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்த சன்னதியில் பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.ஒலி, ஒளி அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பிட்டு மரகத நடராஜர் காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனத்திற்காக ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் மரகத நடராஜரின் திருமேனில் பூசப்பட்ட சந்தனம் களைதல் நடந்து புதிய சந்தனம் பூசப்படும். அதன்படி நேற்று காலை 9:00 மணிக்கு சந்தனம் களையப்பட்டது.
மற்ற 364 நாட்களும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை நடக்கும். நேற்று காலை 10:30 மணி முதல் சந்தனம் களையப்பட்ட மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 31 வகையான அபிஷேகங்கள் நடந்தன.பின்னர் சந்தனம் முதலான தைலங்கள் பூசப்பட்டன. கரும்பச்சை நிறத்தில் மூலவர் காணப்பட்டார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடந்தது.
இன்று ஜன., 10 அதிகாலை 5:00 மணிக்கு கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. சூரிய உதயத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்பட்டு, மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரிங்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் வீதியுலாவும், மாலை 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு சுவாமிக்கு காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் வந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
படம் எடுக்க அனுமதி மறுப்பு: ஆருத்ரா தரிசன விழாவின் போது மரகத நடராஜர் சிலையை பத்திரிகை போட்டோ கிராபர்கள் பல ஆண்டுகளாக படமெடுத்து வந்தனர். கருவறைக்குள் இருக்கும் மரகத நடராஜர் சிலையை படம் பிடிப்பது ஆகம விதிப்படி தவறு என நேற்று அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் அனுமதி மறுத்து விட்டார்.
* பக்தர்களுக்கு தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படவில்லை. கட்டண தரிசன பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்தனர்.