மதுரை: ‘‘இளைஞர்கள் தேசபக்தி மற்றும் நாட்டிற்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பது அவசியம்,’’ என, மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடந்த தேசிய இளைஞர் தின விழாவில் அதன் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசினார். மடம் சார்பில் தேசிய இளைஞர் தின விழா கட்டுரை போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி சுவாமி கமலாத்மானந்தர் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் தன்னம்பிக்கையுடன் இரு எனவும், மேலை நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் பாரதநாட்டின் பண்புக்கு இசைவானவற்றை மட்டும் கற்றுகொள் எனவும் கூறினார். அச்சத்தை வழிபடுங்கள் என்றார். அச்சம் நேரும் காலங்களில் அஞ்சாமல் இரு; வீரனாக இருந்து அதை எதிர்கொள் என்பது அதன் பொருள். அவர் இந்திய மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாகவும், அதிகமாகவும் உழைத்தார். சம்பாதிக்க மட்டுமே பிறந்தவர்கள் என்று இளைஞர்கள் தங்களை நினைக்காமல் சாதனைகளை புரிய பிறந்தவர்கள் என்று சிந்திக்க செய்தவர் சுவாமி விவேகானந்தர், என்றார். சுவாமி தத்பிரபானந்தர், பேராசிரியர்கள் சுந்தரம், ஸ்ரீநிவாசன், பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஸ்ரீநிவாசன், முனைவர் பர்வீன் சுல்தானா, தேசிய சிந்தனை கழக செயலர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.