பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
11:04
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் அஷ்டபுஜ பாலமதன வேணுகோபால ஸ்வாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா மற்றும் தேர்த்திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.வாழப்பாடி அடுத்த பேளூரில், வரலாற்று சிறப்புமிக்க பழமையான அஷ்டபுஜ பாலமதன வேணுகோபால ஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு எட்டு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக, ஸ்ரீபாமா, ருக்மணி சமேதராய் கிருஷ்ண பகவான் அருள்பாலித்து வருகிறார். வேணுகோபால ஸ்வாமி திருக்கோவில் திருப்பணி சங்கத்தின் வாயிலாக பக்தர்களின் நன்கொடையில், ராஜகோபுரம், மூலவர் விமானம், அம்பாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார் விமானம் மற்றும் சக்கரத்தாழ்வார், விநாயகர், நாகர் சன்னதியுடன் வேணுகோபால ஸ்வாமி திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை கும்பாபிஷேக விழா, வெகுவிமரிசையாக நடந்தது.சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனர். தொடர்ந்து, மாலை 3 மணியவில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, வேணுகோபால ஸ்வாமி திருக்கோவில் திருப்பணி சங்க நிர்வாகிகளான, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயராமன், கூட்டுறவு வங்கி முன்னாள் வட்டார மேலாளர் தனபால், சவுந்திரராஜன் மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தக்கார் சுரேஷ்குமார், செயல் அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.