பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
11:04
கும்பகோணம்: திருநீலக்குடி மனோக்கியநாத சுவாமி கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் சித்திரைப்பெருவிழா தொடங்கியது.கும்பகோணம் அருகே திருநீலக்குடியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அழகாம்பிகை, தவக்கோலம்மை உடனாய மனோக்கியநாத சுவாமி கோவில் உள்ளது. திருப்பாற்கடலில் மேருவை மத்தாக்கி வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக்கொண்டு தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டிக் கடைந்தனர்.முதலில் ஆலகால விஷம் தோன்றியது. தேவர்களும், அசுரர்களும் அதைக்கண்டு அஞ்சினர். அப்போது சிவபெருமான் விஷத்தை எடுத்து உண்டார்.
விஷம் பெருமான் கண்டத்தில் நின்று நீலநிறமாயிற்று. விஷம் உண்ட சிவபெருமானுக்கு உடலில் வெப்பம் உண்டானதால் அவ்வெப்பத்தை போக்க அம்பிகை எள் எண்ணெய் தேய்த்து உடலைக்குளிரச் செய்தார்.அதனால் இக்கோவிலில் அமைந்துள்ள மனோக்கியநாதர் மேனியில் எண்ணெய் அபிஷேகம் செய்ய அவ்வெண்ணெய் முழுவதும் மனோக்கியநாதர் திருமேனியில் சுவறிவிடும். இவ்வாறு சிறப்புகள் பலபெற்ற இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைப்பெருவிழா அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இவ்வாண்டும் நேற்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்று விழா நிகழ்ச்சியின்போது திரளான முக்கியபிரமுகர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு சுவாமி அம்பாள் வீதியுலா நடந்தது. விழா நாட்களில் தினசரி இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது.வரும் 29ம் தேதி இரவு 9 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், வீதியுலாவும் நடக்கிறது. மே மாதம் 4ம் தேதி காலை 10.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீர்த்த உற்சவம் நடக்கிறது. 6ம் தேதி காலை 9 மணிக்கு சப்தஸ்தானப் பல்லக்கு புறப்பாடு நடக்கிறது.பல்லக்கு இளந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆலயங்களுக்கு சென்று 7ம் தேதி காலை திருநீலக்குடி வந்தடைகிறது.விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் ஆலோசனையின் பேரில் கண்காணிப்பாளர் அருணாசலம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.