சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு சுத்திகிரியை பூஜைகள் நாளை தொடங்குகிறது. பந்தளத்தில் இருந்து திருவாபரணமும் நாளை புறப்படுகிறது.
மகரஜோதி தரிசனத்துக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. திருவாபரணம் பந்தளத்தில் இருந்து நாளை புறப்படுகிறது. மகரஜோதி நாளில் ஐயப்பனுக்கு நடைபெறும் முக்கிய பூஜை மகர சங்கரம பூஜை. இது இந்த ஆண்டு 15-ம் தேதி அதிகாலை 2:09 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு முன்னோடியாக சுத்திகிரியைகள் நாளை தொடங்குகிறது.நாளை மாலை தீபாராதனைக்கு பின் பிராசாத சுத்தி பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பிம்ப சுத்தி பூஜைகள் நடைபெறும். தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் இந்த பூஜைகளை நடத்துவர். மகரவிளக்கு நாளில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் சன்னிதானத்தில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
பாண்டித்தாவளத்தில் 9 இடங்களில் இருந்து 75 ஆயிரம் பக்தர்கள் ஜோதி தரிசனம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜோதி தெரியும் பிற இடங்களுக்கு பக்தர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகரஜோதி தரிசனத்துக்கு பின்னர் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்க கூட்டம் அதிகரிக்கும். இதனால் வடக்கு வாசல் வரிசையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாளிகைப்புறம் நடைப்பந்தலில் இருந்து இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.புல்மேட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஹில்டாப்பில் மண் இடிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு பக்தர்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது.