பதிவு செய்த நாள்
12
ஜன
2020
04:01
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை, 26ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் பெரியகோவிலில், 23 ஆண்டுகளுக்கு பின், பிப்., 5ல், கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, இரண்டு ஆண்டுகளாக, தொல்லியல் துறையினர் சார்பில், பிரகார நடைபாதையில் செங்கற்கள் பதிக்கும் பணி, திருச்சுற்று மாளிகையில் உள்ள சிவலிங்கங்களைப் பாதுகாக்கும் வகையில் மரச்சட்டம் அமைக்கும் பணி, புல் தரை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கேரளாந்தகன், ராஜராஜன், கருவறை கோபுரங்களில், அறிவியல் முறைப்படி, துாய்மைப் பணி நடைபெற்றது.
தற்போது அம்பாள், சுப்பிரமணியர் சன்னிதிகளின் கோபுரங்கள், திருச்சுற்று மதில்கள் துாய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. 75 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளும், பொங்கலுக்குள் முடிக்க, தொல்லியல் துறையினர் திட்டமிட்டுஉள்ளனர்.இதை போல, அறநிலையத்துறை சார்பில், மா காப்பு சாத்துபடி முடிந்து, அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து கலசம் பொருத்துதல், யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெறவுள்ளன.
இதனிடையே விமான கருவறை, கேரளாந்தகன், ராஜராஜன் வாயில் கோபுரங்களுக்கு, கடம் கொண்டு செல்வதற்கான தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், விளக்குகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் போன்றவற்றை, 26ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, திருப்பணி குழு தலைவர் திருஞானம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, வரும், 27ம் தேதி முதல், பிப்., 1ம் தேதி வரை, பூர்வாங்க பூஜை நடைபெறுகிறது. அதன்பின், யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.