தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய கொடி மரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் சோழர் காலத்தில் நிறுவப்பட்ட கொடிமரம் படையெடுப்புகளால் அழிந்தது.அதன் பின் நாயக்க மன்னர்கள் காலத்தில் நந்தி மண்டபத்துக்கு முன் புதிய கொடி மரம் நிறுவப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி மன்னரால் 1801ம் ஆண்டில் இந்த கொடி மரத்துக்கு புதிய கருங்கல் பீடத்தை கட்டினார். இத்தகவல் பெரியகோவிலில் அவர் எழுப்பிய விநாயகர் கோவிலின் வடக்குச் சுவரிலுள்ள மராட்டிய மொழிக் கல்வெட்டில் காணப்படுகிறது.கடந்த 1814ம் ஆண்டில் பழுதடைந்த கொடி மரத்துக்குப் பதிலாகப் புதிய கொடி மரத்தை மன்னர் இரண்டாம் சரபோஜி செய்து கொடுத்தார்.
இக்கொடி மரமும் பழுதடைந்து விட்டதால் 2003 பிப்ரவரி 7ல் புதிய கொடி மரம் அமைக்கப்பட்டு அதற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கொடி மரத்தின் உயரம் 28 அடி. இதன் கீழ் இருக்கும் பீடம் 5 அடி உயரம். மொத்தம் 33 அடி உயரத்தில் இக்கொடி மரம் உள்ளது.தற்போது புனரமைப்பு செய்து மெருகூட்டுவதற்காக கொடி மரத்தின் மீது இருந்த பித்தளை கவசங்கள் ஜனவரி 2ல் கழற்றப்பட்டது. அப்போது கொடி மரம் சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் புதிய கொடி மரம் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மயிலாடுதுறை சென்னை ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் புதிய கொடி மரம் வாங்குவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.