பதிவு செய்த நாள்
13
ஜன
2020
10:01
திருப்பதி : திருமலையில், வரும், 15ம் தேதி முதல், சுப்ரபாத சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில், தினமும் அதிகாலை, 3:00 மணிக்கு, ஏழுமலையானை சுப்ரபாதம் பாடி, துயில் எழுப்பி, அதன்பின், நித்திய கைங்கரியங்களான, தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகளை, தேவஸ்தானம் நடத்தி வருகிறது.மார்கழி மாதத்தில் மட்டும், சுப்ரபாதத்துக்கு பதிலாக, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு, ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். அதன்படி, டிசம்பர், 17 முதல், திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. நாளை போகி பண்டிகையுடன், மார்கழி மாதம் நிறைவு பெறுகிறது. இதனால், வரும், 15 முதல், ஏழுமலையான் கோவிலில், மீண்டும் சுப்ரபாத சேவை துவங்கப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.