சபரிமலை: சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு காலங்களில் ஜன.14 வரை வருமானம் ரூ.234 கோடியை எட்டியது. கடந்த ஆண்டை விட ரூ.69 கோடி அதிகம் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். சன்னிதானத்தில் அவர் கூறியதாவது: நடப்பு மண்டல, மகரவிளக்கு காலங்கள் பிரச்னை இன்றி நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கூட்டு முயற்சியால் பாலிதீன், பிளாஸ்டிக் குறைந்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா சபரிமலையை நோக்கி இந்த ஆண்டு மேலும் ஒரு அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மண்டல காலத்துக்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கப்படும். மாஸ்டர்பிளான் குழு அங்கீகரித்துள்ள ரூ.58 கோடிக்கான பணிகள் உடனடியாக தொடங்கும். பல திட்டங்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. பம்பை-சன்னிதானம் ரோப்வே திட்டத்துக்கு மத்திய வன அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிக நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்தனர். அதை எண்ணி முடிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார். தேவசம்போர்டு தலைவர் வாசு, உறுப்பினர்கள் ரவி, விஜயகுமார் உடனிருந்தனர்.