பதிவு செய்த நாள்
16
ஜன
2020
10:01
தர்மபுரி: தை மாத முதல்நாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தன.
தை முதல் நாள் தமிழர்களின் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான மக்கள், அதிகாலையில் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டனர். தர்மபுரி தேர்நிலையத்தில் உள்ள முத்துகாமாட்சியம்மன் கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு பால், தயிர், நெய், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர், தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்டு, அதன் பிரசாதத்தை கொண்டு வந்து, இந்த கோவிலில் வைத்து வழிபட்டு சென்றனர். இதேபோல், தர்மபுரி எஸ்.வி.,ரோடு, சாலை விநாயகர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், தை மாத பிறப்பையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.