பதிவு செய்த நாள்
17
ஜன
2020
12:01
தஞ்சாவூர்: கல்லணையில், கரிகால சோழன் மணி மண்டபத்தில், கரிகால சோழனுக்கும், ஆங்கில பொறியாளர் ஆர்தர் காட்டனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் பொங்கல் விழா நடத்தினர்.
தஞ்சாவூர், கல்லணையை கட்டிய கரிகால சோழனுக்கும், அணையை செம்மைப்படுத்திய, ஆங்கில பொறியாளர் ஆர்தர் காட்டனுக்கும், நேற்று காலை, பொங்கல் வைத்து நன்றி தெரிவிக்கப்பட்டது. காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில், விவசாயிகள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கரிகாலன் மணி மண்டபத்தில் உள்ள கரிகால சோழன் சிலைக்கும், கொள்ளிடம் கதவணையில் உள்ள ஆர்தர் காட்டன் சிலைக்கும் மாலை அணிவித்து, பொங்கல் படைத்து, வழிபாடு நடத்தினர்.
மணியரசன் கூறியதாவது: கல்லணை என்பது, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம். இதை கட்டிய கரிகால சோழனுக்கும், செம்மைப்படுத்திய ஆர்தர் காட்டனுக்கும் நன்றி தெரிவிக்க, விவசாயிகள் அனைவரும் பொங்கலுக்கு மறுநாள், நன்றி பொங்கல் என கொண்டாட வேண்டும். முல்லை பெரியாறு அணையை வடிவமைத்து, கட்டிய பொறியாளர் பென்னிகுக் நினைவாக, அவரை போற்றும் வகையில், அந்த பகுதி மக்கள் விழா கொண்டாடி வருகின்றனர். அதுபோல, காவிரி உரிமை மீட்பு குழு, முதன் முறையாக, இந்த ஆண்டு முதல் இவ்விழாவை நடத்துகிறது. அரசுமும், இதை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.