பதிவு செய்த நாள்
17
ஜன
2020
12:01
பேரூர் :ஈஷா ஆதியோகி முன்பாக, மாட்டு பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை ஈஷா யோகா மையத்தில், பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, மாட்டு பொங்கல் விழா விமரிசையாக நடக்கும்.
அதன்படி, ஆதியோகி சிலை முன், மாட்டு பொங்கல் விழா, நேற்று நடந்தது. மாலை, 3:00 மணிக்கு துவங்கிய விழாவில், பழங்குடி மக்கள், விவசாயிகள், வெளிநாட்டினர் உட்பட, பல தரப்பினர் பங்கேற்று பொங்கல் வைத்தனர். பொங்கல், கரும்பு, நவதானியங்கள் உள்ளிட்டவற்றை ஈஷாவில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு படையலிட்டு வணங்கினர். ஈஷா சம்ஸ்கிருதி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. வெளிநாட்டினர் சார்பில், காவேரி கூக்குரல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தினர். நாட்டு மாடுகள் கண்காட்சிநாட்டு மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதின் அவசித்தை உணர்த்தும் வகையில், ஆதியோகி முன், ஆண்டுதோறும் நாட்டு மாடுகள் கண்காட்சி நடத்தப்படுகிறது. நேற்று, காங்கேயம், கிர், காங்கிரிஜ், ஓங்கோல், தார்பார்க்கர், தொண்டை மாடு, ரதி உள்ளிட்ட, 20 வகையான நாட்டு மாடுகள் காட்சிக்கு நிறுத்தப்பட்டிருந்தது; இன்றும் கண்காட்சி நடக்கிறது.