கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி; மஹா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2026 10:02
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, சத்குரு பேசினார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டங்கள் நேற்று நடந்தன. நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: மஹா சிவராத்திரி பல்வேறு மக்களால் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. சிவனும், பார்வதியும், ஒன்றிணைந்து அருள்புரியும் தினமே மஹா சிவராத்திரியாக பார்க்கப்படுகிறது. அனைத்து எதிரிகளையும் ஒழிக்கும் தினம். வாழ்வில் அனைத்து விஷயங்களையும் வெல்ல வழி வகுக்கும் நாளாக உள்ளது. துாக்கம் போல் இறப்பையும் நம்மால் தடுக்க முடியாது. எதுவும் நேர்கோட்டில் இருந்தால் அது சிறப்பாக இருக்காது. ஒவ்வொருவரின் அனுபவமும் தொடர்ந்து கொண்டே உள்ளது. இது ஒரு சுற்று போல் நடந்து கொண்டுள்ளது. காலம் மாறிக் கொண்டே உள்ளது. அதனுடன் நாம் இணைந்து செல்வது அவசியம். அனைவரும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். எண்ணங்கள் உயிர்ப்புடன் இருந்தால் மட்டுமே நலமாக இருக்க முடியும். காலத்தை வெல்வது சாதனை அல்ல.
கடந்த, 80 ஆண்டுளாக பல்வேறு காரணங்களால் ஆன்மிக நடவடிக்கைகளை நாம் மறந்து விட்டோம். தலைமுறை இடைவெளி அதிகரித்து வருகிறது. வரும் கால தலைமுறை நம் கலாசாரம், ஆன்மிகம் குறித்து தெரிவிப்பதை நம்ப மறுக்கின்றனர். ஆன்மிகம் என வரும்போது எந்த ஒரு கேள்வியும் இருக்கக் கூடாது. ஆனால், இன்றைய தலைமுறையினர் ஒவ்வொன்றிலும் கேள்வி எழுப்புகின்றனர். நாகரிகம் மாறிக் கொண்டுள்ளது. இந்த நாகரிகத்தை நாம் சனாதனம் என்கிறோம். இந்து என்பதற்காக நாம் இதை நம்பவில்லை. இது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான நெறி. ஒவ்வொருவரின் யோசனையும் வித்தியாசமாக இருக்கும். சனாதன தர்மம் முற்றிலும் மாறுபட்டது. இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து ஆதியோகி முன் உள்ள யோகேஸ்வர லிங்க ஸ்வரூபத்துக்கு, சத்குரு வில்வ பொடி, அரிசி பொடி, வில்வ இலை, வேப்பிலை கொண்ட மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை செய்தார்.