பதிவு செய்த நாள்
17
ஜன
2020
12:01
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, 18ம் நுாற்றாண்டை சார்ந்த, இரண்டு, சதிகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு. பாலாஜி தலைமையில், தமிழர் தொன்மம் குழு அமைப்பாளர் வெற்றித்தமிழன் ஆகியோர், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த, எடமிச்சி கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டு இரண்டு, சதிகல் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு.பாலாஜி கூறியதாவது: போரில் வீர மரணமடைந்த கணவரின் உடலோடு, அவனது மனைவி தீ மூட்டி, உயிரை மாய்க்க உடன்கட்டை ஏறும் நிகழ்விற்கு, சதி என்று பெயர். மரணத்தை தழுவிய கணவன், மனைவியின், நினைவை போற்றும் வகையில், அவர்களது உருவங்களை சிற்பமாக செதுக்கி வழிபடுவர். இதற்கு. சதி கல் என்று பெயர். எடமிச்சி கிராம குளக்கரையில், உடைந்த நிலையில், இரண்டு சதிகற்களை கண்டறிந்தோம். அதில், ஒரு சதிக்கல்லில், எட்டு வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது. அதில், விஷ வருஷம், ஆனி மாதம், செந்தாமள் சிவலோகம் என, உள்ளது. சில வரிகள் சிதைவுற்று உள்ளன. இது, 1706ம் ஆண்டு, செந்தாமள் என்ற பெண், கணவன் இறந்தவுடன், தீ மூட்டி உடன்கட்டை ஏறியுள்ளார் என, அறிய முடிகிறது. செந்தாமள் உருவம் வலது பக்கமும், அவரது கணவர் உருவம் இடது பக்கமாக உள்ளது. இரண்டாவது சதிகல்லில், வலது பக்கம் கணவனின் உருவமும், இடப்பக்கம் மனைவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.இவை, 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது. எங்களது கள ஆய்வில், உத்திரமேரூர் பகுதியில், முதன்முதலாக கல்வெட்டுடன் கூடிய, சதிகல் இங்கே நேற்றுமுன்தினம் கண்டெடுத்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.