பதிவு செய்த நாள்
22
ஜன
2020
01:01
திருப்பூர்:சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழாவில், பக்தர்கள் பாதுகாப்பு நலன்கருதி, 100 சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற, காங்கயம், சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழா, வரும், 30ல் துவங்கி, பிப்., 17 வரை நடக்கிறது. பிப்., 6, 7 மற்றும் 8ம் தேதிகளில், தேரோட்டம் நடக்கிறது.
தேர்த்திருவிழா ஏற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சிவன்மலையில் நேற்று நடந்தது.தாராபுரம் சப்- கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் புனிதவதி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர்.தேரோட்ட நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். அதனால், அவர்களின் பாதுகாப்பு கருதி, 100 இடங்களில், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். 300 போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். பக்தர் வசதிக்காக, மூன்று ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். மலையடிவாரத்தில் நெரிசலை குறைக்க, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.போக்குவரத்துதுறை மூலம், கூடுதல் பஸ் இயக்கப்பட வேண்டும். தமிழக அரசு தடை செய்துள்ள, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.உணவு பொருள் விற்பனையை, உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டுமென, சப்-கலெக்டர் அறிவுறுத்தினார்.ஆலோசனை கூட்டத்தில், காங்கயம் பி.டி.ஓ., ரமஷே், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி, போலீசார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.