பதிவு செய்த நாள்
23
ஜன
2020
10:01
நாமக்கல்: சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பதால், ஜவ்வரிசி, மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.
நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில், 1.50 லட்சம் ஏக்கரில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. மரவள்ளிக்கிழங்கை, வியாபாரிகளிடம் இருந்து, ஆலை உரிமையாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்து, ஜவ்வரிசியாகவும், கிழங்கு மாவாகவும் தயாரித்து, விற்பனை செய்கின்றனர். அவ்வாறு தயார் செய்யப்படும் ஜவ்வரிசி, கிழங்கு மாவு, தமிழகம் மற்றுமின்றி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்பட இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, வடமாநிலங்களில், சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பதால், ஜவ்வரிசி தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், மரவள்ளிக்கிழங்கின் கொள்முதல் விலையும், 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.
இதுகுறித்து, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: வழக்கமாக சிவராத்திரி நேரத்தில், வடமாநிலங்களில், ஒரு மாதத்துக்கு விரதம் கடைப்பிடிப்பர். அப்போது, ஜவ்வரிசி மட்டுமே உட்கொள்வர். அதனால், அதன் தேவை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் விலை டன், 8,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல், ஜவ்வரிசி (சேகோ) விலை, 90 கிலோ கொண்ட மூட்டை, பொங்கலுக்கு முன், 4,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 4,810 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, உற்பத்தியாளர்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.