பதிவு செய்த நாள்
04
பிப்
2020
11:02
திருவாரூர்: ஞானபுரி சித்ரகூட க்ஷேத்திரத்தில், சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி குரு ஸ்தலத்தை அடுத்துள்ள, ஞானபுரி சித்ரகூட க்ஷேத்திரத்தில், சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. உடனேயே பலனளிக்கும் இந்த ஆஞ்சநேயர், பக்தர்களின் சகல சங்கடங்களையும் போக்கி, மங்களத்தை உண்டாக்க வேண்டுமென்று, சங்கடஹர மங்கள மாருதி என்ற நாமத்துடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.மேலும், ஆஞ்சநேய சுவாமியின் வலது புறம் லட்சுமி நரசிம்மர் சிலையும், இடதுபுறம் கோதண்டராமர், சிலையும் ஒரே நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருப்பணிகளை, ராமகிருஷ்ண ஸ்தபதி தலைமயிலான குழுவினரும் மற்றும் பொறியாளர் சதீஷ்சங்கர் ஆகியோரும் செய்திருந்தனர்.திருப்பணிகள் முடிந்த நிலையில், வரும், 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை பூஜைகள், ஜனவரி 31ல் துவங்கின. 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 9:00 - 10:00 மணிக்குள், ஜகத்குரு ஆச்சாரிய ஸ்ரீகிருஷ்ணாநந்த சுவாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்.
அத்துடன் வைதீக, ஆகம தர்ம காரியங்கள், தினகர் சர்மா தலைமையில் நடக்கிறது. விழாவிற்கானஏற்பாடுகளை, கோவில் டிரஸ்டிகளும், ஜகத்குரு பத்ரி சங்கராச்சார்ய சமஸ்தானம் குழுவினரும் செய்து வருகின்றனர்.செல்லும் வழி: கும்பகோணத்தில் இருந்து, மன்னார்குடி செல்லும் வழியில், 16 கி.மீ.,யில் ஆலங்குடிக்கு முன்பாக, இக்கோவில் அமைந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து பஸ்களும், கோவில் வாசலில் நிறுத்தப்படும்.