பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
10:04
தஞ்சாவூர் : திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா, மே 17ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் சிறப்பு பரிகார ஹோமங்கள், வழிபாடு செய்ய, முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என, கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை மாவட்டம், திட்டை கிராமத்திலுள்ள, வசிஸ்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு, ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, மே 17ம் தேதி, மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். குருபெயர்ச்சியையொட்டி, 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி, லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள், திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சொட்டுநீர்: கோவிலில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில், சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கற்கள் காற்றிலிருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து, வேதி வினை ஏற்பட்டு, 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை ஸ்வாமியின் மீது சொட்டுகிறது. இத்தகைய அமைப்பு வேறு சிவாலயங்களில் எங்கும் இல்லை. குருபெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்துகொள்ள விரும்பும் பக்தர்களுக்கு, திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவிலில், மே 31ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. இதற்கு, முந்நூறு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு கோவிந்தராஜ் தெரிவித்தார்.