பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
10:04
நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கடந்த வெள்ளி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படுவதால், கடந்த வெள்ளி முதல் நேற்று வரை, 70 ஆயிரம் பேர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்துள்ளனர். இலவச தரிசனம், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பெற்றுள்ள பக்தர்கள், ஒரு லட்சம் பேர் வரை சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்கு, 12 மணி நேரமும், சிறப்பு தரிசனத்திற்கு, 5 மணி நேரமும், பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், 4 மணி நேரமும் காத்திருக்க வேண்டியுள்ளது.முடி காணிக்கை செலுத்துமிடத்தில் போதிய அளவு தொழிலாளர்கள் இல்லாததால், இங்கும் பக்தர்கள், 4 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருக்கின்றனர். விடுதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.இதனால், சிறப்பு விடுதிகளை ஒதுக்கும் மத்திய விசாரணை அலுவலகத்தின் முன், ஏராளமான அளவில் பக்தர்கள் கூடிவிட்டனர். இங்குள்ள கவுன்டர்களில் பணிபுரிபவர்கள் முறைகேடாக அதிக விலைக்கு விடுதிக்கான கட்டணங்களை வசூல் செய்வதாக பக்தர்கள் கூச்சல் போட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பிற்பகல் வரை கூட்டம் நீடிக்கும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.