திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
பதிவு செய்த நாள்
06
பிப் 2020 11:02
சென்னை: திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மருந்தீஸ்வரர் கோவில். இக்கோவிலில், மூலவர் மருந்தீஸ்வரராகவும், அம்பாள் திரிபுரசுந்தரியாகவும் அருள்பாலிக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில், அறநிலையத் துறை சார்பில், திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு, ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. 75 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் திருப்பணிகள் பூர்த்தியாகின. கும்பாபிஷேக நாளான, நேற்று காலை, 7:00 மணிக்கு, ஆறாம் கால அவபிருதகால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கிருஹபிரிதிதானம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு கடப்புறப்பாடு நடந்தது.
காலை, 9:50 மணிக்கு ராஜகோபுரங்கள், விமான கோபுரங்களுக்கு, சிவ வாத்தியங்கள் ஒலிக்க, கும்ப நீர் சேர்க்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தின்போது, ராஜகோபுரங்களுக்கு, ‘கிளைடர்’ விமானம் மூலம் மலர் துாவப்பட்டது. இதில், பங்கேற்ற ஏராளமான பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷத்துடன் வழிபாடு நடத்தினர். இதையடுத்து, மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். இரவு, 7:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, தியாகராஜ சுவாமி திருக்கல்யாண வைபவம், திருவீதி உலா நடந்தது.
|