கார்த்திகை தீபத்திருவிழா; தீபங்களால் ஜொலித்த கோவில்கள், வீடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2025 12:12
திருப்பூர்: கார்த்திகை தீபத்திருவிழாவில், திருவண்ணாமலையில் மஹாதீபம் ஏற்றி வைக்கப்பட்டதும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, நேற்று மாலை, 6:30 மணிக்கு திருப்பூர் நகரப்பகுதி தீப ஒளியில் ஒளிர்ந்தது.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை,4:00 மணிக்கு, சிறப்புபூஜையை தொடர்ந்து, மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தீமையை அழிக்கும் வகையில், சொக்கப்பனை எரிக்கப்பட்டு, ‘அரோகரா... அரோகரா...’ என கோஷமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். அனைத்து கோவில்களிலும், தீபஸ்தம்பத்தில் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடு நடந்தது. முன்னதாக, ஒரு தட்டில் ஐந்து அகல் விளக்குகளில் ‘பரணி தீபம்’ ஏற்றி வைக்கப்பட்டது. அருகிலேயே, தென்னை ஓலையை கொண்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கொங்கணகிரி முருகன் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் என, அனைத்து கோவில்களிலும், கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடந்தது. திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகள், வீடுகள், கடைகள், நிறுவனங்களில், மாலையில் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டது. வீட்டு வாசலில் கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் அதனை சுற்றி அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டனர். நிலவு, வாசப்படிகள், சுற்றுச்சுவர், வீட்டின் மாடியில் உள்ள கைப்பிடி சுவர், தெருக்குழாய் அருகே, அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர். ஒரே நேரத்தில், அனைவரும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்ததால், குடியிருப்பு பகுதிகள் தீப ஒளியில் ஜொலித்தன.