மதுரை: விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே கணக்கனேந்தலில் பாண்டியர் கால பாடல் கல்வெட்டை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர்கள் தகவல்படி மதுரை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மருதுபாண்டியன், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர் உதயகுமார் படியெடுத்துள்ளனர்.
பேராசிரியர்கள் திருமால்ராஜா, ஜெயக்குமார், மணிகண்டன், நாகராஜா, ஆதிதேவன் தகவல்படி காப்பாட்சியர் ஆய்வு செய்த போது கல்வெட்டில்ஸ்ரீ அன்ன மென்னு நடை என துவங்கும் தமிழ் பாடல் இருப்பதை கண்டறிந்தார். பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலம் குறித்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.மருதுபாண்டியன் கூறியதாவது: இது பொன்னமராவதி முதலாம் மாறவர்மன் கல்வெட்டின் தொடர்ச்சி. கல்வெட்டில் சகர ஆண்டு 1139 என்று உள்ளது. இதன்படி கிறிஸ்துவ ஆண்டு 1217 ஆகும்.இதன் மூலம் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இரண்டாம் ஆட்சி ஆண்டை சேர்த்து கி.பி., 1216 - 1238 என்று கூறலாம். இவர் தான் முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190-1216) ஆவார். இவர் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மூத்த சகோதரர்.இவரது ஆட்சி 1216ல் முடிந்தது, 1216ல் சுந்தரபாண்டியன் ஆட்சி துவங்கியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். ஆனால், இக்கல்வெட்டு குலசேகர பாண்டியன் ஆட்சி 28 ஆண்டுகள் நீடித்ததை காட்டுகிறது. குலசேகரனும், சுந்தரபாண்டியனும் 1216 - 1217ல் ஒன்றாக ஆட்சி செய்ததை உறுதி செய்கிறது. கல்குறிச்சி சிவன் கோயிலுக்கு ஒரு சமூகத்தினர் நெல் வயலை கொடையாக அளித்ததாக கூறுகிறது. இந்த கல்வெட்டு கல்குறிச்சி கல்தச்சன் பூவன் இரட்டையான் என்ற சோழ கங்கதச்சன் என்பவரால் வெட்டப்பட்டுள்ளது. இதை படித்து பொருள் அறிய தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் உதவினார், என்றார்.