பதிவு செய்த நாள்
22
பிப்
2020
11:02
கோபி: பச்சமலை முருகன் கோவிலில், மூன்றாவது கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், புதுப்பித்து, பெயின்ட் அடிக்கும் பணிக்காக, ராஜகோபுரத்துக்கு பாலாலயம் செய்யப்பட்டது.
கோபி அருகே பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில், 1981, 2006ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை, 2ல், மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து உபயதாரர்கள் நிதி உதவியுடன், கோவிலில் பல்வேறு திருப்பணி நடக்கிறது. இதன்படி, 16 லட்சம் ரூபாயில், சிவன் சன்னதி மண்டபம் அழகுபடுத்தும் பணி, 43 லட்சம் ரூபாய் செலவில், நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தனி சன்னதி கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. கடந்த, 2006ல் ஜூலையில் கட்டப்பட்ட, ஐந்து நிலை ராஜகோபுரம், 14 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்பட்டது. மூன்றாவது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 1.90 லட்சம் ரூபாய் மதிப்பில், ராஜகோபுரம் புதுப்பித்து, பெயின்ட் அடிக்கும் பணிக்கு, நேற்று முன்தினம் இரவு பாலாலயம் செய்யப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.