பதிவு செய்த நாள்
22
பிப்
2020
01:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 175 கோயில்களில் நேற்றிரவு விடிய விடிய சிவராத்திரி பூஜைகள் நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய சிவாலயங்களான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்,தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருவெற்றியூர் வன்மீக நாதர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர்கோயில்,நயினார்கோவில் நாகநாத சுவாமி, உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட 175 கோயில்களில் சிறப்புப் பூஜைகளும், அபிஷேகங்களும் நேற்று காலை முதல் இரவு மற்றும் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விரதமிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நள்ளிரவில் மகா சிவராத்திரி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனைக்கு பின் சிவ பக்தர்கள் விரதத்தை முடித்து வழிபாடு நடத்தினர். ஆன்மிக சொற்பொழிவுகள் உள்ளிட்டவை நடைபெற்றன. ராமநாதபுரம் சொக்கநாதர் ஆலயத்தில் பிரம்ம குமாரிகள் சார்பில் பட பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவவழிபாடு நடத்தினர். மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குலதெய்வங்களுக்கு பொதுமக்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.சொந்த ஊரிலிருந்து மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று தங்கியவர்கள் கூட மகா சிவராத்திரியை முன்னிட்டு ஊரில் உள்ள குல தெய்வத்தை வழிபட வந்ததால் அனைத்துப் பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. பூஜைப் பெட்டிகள் சுமந்தும், கருப்பணசாமி வேடமணிந்தும் கிராமங்களில் குலதெய்வ வழிபாடு பூஜைகள் நடந்தன.
*கமுதி அருகே கோவிலாங்குளம் திருக்காலுடைய அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை, அபிேஷகங்களுடன் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் கரும்பாலை தொட்டில், பட்டு செலுத்தி நேர்த்திகடன் செலுத்தினர். அபிராமம் சப்பாணி கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாவிளக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
*திருப்புல்லாணி அருகே பொக்கனரேந்தலில் உள்ள புல்லாணி அம்மன் கோயிலில் சிவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சாமுண்டீஸ்வரி, பைரவர், வீரபத்திரர், ராக்காச்சியம்மன், அகத்தியர் பீடம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி பொங்கலிட்டனர். பூஜைகளை பூஜகர் அரியமுத்து செய்தார். அன்னதானம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் உட்பட ஏராளமான குலதெய்வ குடிமக்கள் பங்கேற்றனர்.