பதிவு செய்த நாள்
22
பிப்
2020
01:02
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் வந்தது. சிவலிங்க வழிபாடு, விளக்கு பூஜை, சிவநாமம் எழுதும் போட்டி, அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வீற்றிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஆன்மிக சங்கங்களின் அகண்டநாம பஜனை, தேவாரம், திருவாசகம், திரு அருட்பா, திருமந்திரம் பஜனை நடந்தது. இரவில் சிவநாமம் எழுதும் போட்டி நடந்தது. தொடர்ந்து கருத்தரங்கம், பட்டி, ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டன. சிவகணேசன் கோயிலில் பஜனை, அபிஷேகம் நடந்தது. தித்தாண்டகம் போற்றி செல்லும் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூசாரி ராஜேந்திரன் செய்தார். பாவாலி பஞ்சலிங்கேஸ்வரர் சிவகுருமடத்தில் சிவராத்திரி வழிபாடு நடந்தது. மீசலுார், தாதம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ராஜம்மாள் கோயிலில் சிறப்பு அபிஷேகத்துடன் விடிய விடிய சிறப்பு வழிபாடு நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 70க்கு மேற்பட்ட கோயில்களில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி அங்காளபரமேஸ்வரி அம்மன், திரவுபதியம்மன், செண்பகதோப்பு வனப்பேச்சி மற்றும் ராக்காச்சியம்மன், சுந்தரபாண்டியம் வைகுண்டமூர்த்தி, நத்தம்பட்டி மலைகொழுந்தீஸ்வரர் உட்பட பல்வேறு கோயில்களில் நேற்றிரவு சிவராத்திரி வழிபாடு நடந்தது. வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மல்லி, மம்சாபுரம், வன்னியம்பட்டி, நத்தம்பட்டி, அச்சம்தவிழ்த்தான் உட்பட 55க்கு மேற்பட்ட கிராமக்கோயில்களிலும் விடிய, விடிய நடந்த சிவராத்திரி வழிபாட்டில் மதுரை, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்தினர் வந்து நேர்த்திகடன் செலுத்தி தரிசனம் செய்தனர்.