விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் அனைவரும் சிவபூஜை செய்த தலங்கள் பல உள்ளன. இது போல, சிவன் தன்னைத் தானே பூஜித்த தலமாக மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் உள்ளது. இங்கு மூலவர் சிவலிங்க வடிவில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதி அமர்ந்த கோலத்தில் உள்ளனர். மதுரையில் சிவன் ‘சுந்தர பாண்டியர்’ என்னும் பெயரில் மன்னராக இருக்கிறார். பாண்டிய மன்னர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். இதனடிப்படையில், மதுரை மன்னரான சிவனுக்கு பட்டாபிேஷகம் நடத்தும் முன்பாக, இங்கு எழுந்தருளி பூஜை செய்கிறார். இந்த விழா ஆவணி மாத மூல நட்சத்திரத்தன்று நடக்கும்.