விதவைத் தாய் ஒருத்தி சிரமப்பட்டு தன் மகனுக்கு பெண் பார்த்து திருமணம் முடித்தாள். மணமான கொஞ்ச நாளிலேயே மகனின் நடவடிக்கைகள் மாறின. தாய் மீதிருந்த அன்பு குறைய ஆரம்பித்தது. மருமகளும் அவள் பங்கிற்கு மாமியாரை அலட்சியப்படுத்தினாள். ஆனால் தாய் எந்த சூழலிலும் மாறவில்லை. காலம் உருண்டோடியது. ஒருகட்டத்தில் மருமகளுக்கு மாமியாரை அறவே பிடிக்கவில்லை. அத்தனை துன்புறுத்தல்களை பொறுமையுடன் மாமியார் ஏற்பது தான் வெறுப்பை அதிகமாக்கியது. மாமியாருக்கு உரைக்கிற மாதிரி ஏதாவது செய்யத் திட்டமிட்டாள். ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் தன் பிறந்த வீட்டுக்கு கிளம்பினாள் மருமகள். வீட்டுக்குள் நுழைந்த மகன் மனைவியைக் காணாமல் தாயை வீட்டை விட்டு துரத்தினான். ‘‘தயவு செய்து வீட்டுக்கு உடனே வா’’ என மனைவியிடம் போனில் கெஞ்சினான். ‘‘உங்க அம்மாவை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அங்கு நிம்மதியாக வாழ முடியாது’’ என்றாள். ‘‘சரி... உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்?’’ ‘‘ எனக்காக உங்க அம்மாவைக் கொன்று விடு’’ அதிர்ந்தான் மகன். ‘‘என்னடி சொல்கிறாய்?’’ ‘‘ஆம். அப்போது தான் என்னால் சுதந்திரமாக வாழ முடியும்’’ சிறிது நேரம் அமைதியாக எதையோ யோசித்தவன். சரி என்று தலையசைத்தான். சட்டென எழுந்து நடக்க ஆரம்பித்தான். ஓரிடத்தில் துாங்கிக் கொண்டிருந்த தாயைக் கண்டான். அவளை இரக்கமின்றி கொல்லத் துணிந்தான். ஆனால், அவனது செயலைக் கண்ட பெரியவர் ஒருவர் புத்திமதி கூறி தடுத்தார். மனைவியின் பேச்சைக் கேட்டு பெரும் பாவம் செய்ய இருந்தேனே என வருந்தினான். உலகில் எதை இழந்தாலும் மீண்டும் பெற முடியும். ஆனால் பெற்ற தாயை...? ‘‘உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவி கொடு; உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே’’