பதிவு செய்த நாள்
24
பிப்
2020
04:02
ஏழை சிறுவன் ஹவார்ட் கெல்லி, தன் பள்ளிக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் வீடு வீடாகச் சென்று பொருள் விற்றான். அவன் கையில் 10 சென்ட்ஸ் மட்டுமே இருந்தது. ஒருநாள் பசி அதிகமானதால் அவனால் நடக்க முடியவில்லை. யாரிடமாவது உணவு கேட்கலாம் என்ற எண்ணத்துடன் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். இளம்பெண் ஒருத்தி வந்தாள். அவளிடம் கேட்க தயக்கமாக இருந்ததால், குடிக்கத் தண்ணீர் மட்டும் கேட்டான்.
அவனது வாட்டம் கண்ட அப்பெண், குடிக்க ஒரு டம்ளர் பால் கொடுத்தாள். தயக்கத்துடன் குடித்து விட்டு, ‘வேலை ஏதும் செய்யாமல் பிறரிடம் பொருள் வாங்கக் கூடாது’ என தன் அம்மா சொல்லியிருப்பதாக தெரிவித்தான். அப்பெண் புன்முறுவல் காட்டினாள்.
பால் குடித்ததால் பலம் பெற்ற சிறுவன், “என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்” என்றான். ஆண்டவர் மீது விசுவாசம் வைக்கும் போது அவர் இரங்கி மனிதரைக் கொண்டு உதவி செய்கிறார் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டானது.
அந்த இளம்பெண் வயதாகி முதுமை அடைந்தாள். ஒருநாள் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்ந்தாள். அங்குள்ள மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், நகரத்திலுள்ள மருத்துவரான ஹவார்ட் கெல்லியிடம் அனுப்பி வைக்கப்பட்டாள். நோயாளியை அடையாளம் கண்டு கொண்ட கெல்லியின் கண்கள் அகல விரிந்தன. அவள் குணம் பெற கவனம் செலுத்தினார். நீண்ட நாளுக்குப் பின்னரே பலன் கிடைத்தது. பூரண குணம் பெற்றாள், செலுத்த வேண்டிய பணத்திற்கான பில்லை கெல்லி அனுப்பினார். அதில் “சிகிச்சைக்கான பணம் டம்ளர் பாலாக ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது” என எழுதப்பட்டிருந்தது. அதன் பின்னரே அவள் உண்மையைக் கேட்டறிந்தாள்.
ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இதயத்தின் ஆழத்தில் இருந்து மருத்துவருக்கு நன்றி தெரிவித்தாள்.