பதிவு செய்த நாள்
25
பிப்
2020
11:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேரோட்டம், மார்ச், 8 ம் தேதி நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள, வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா, வைகுண்ட ஏகாதேசி மற்றும் மாசிமகத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசிமகத் தேர்த்திருவிழா, மார்ச், 1 ம் தேதி கிராம சாந்தியும், இரண்டாம் தேதி கொடியேற்றத்துடனும் துவங்குகிறது. ஏழாம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் இரவு, 8.30 மணிக்கு வாகனங்களில், அரங்கநாத பெருமாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7-ஆம் தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, 8 ம் தேதி அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை, 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வர்.
9ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 10 ம் தேதி சஷேவாகனத்தில் தெப்போற்சவமும், 11 ம் தேதி சந்தான சேவை சாற்றுமுறை உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.