பதிவு செய்த நாள்
03
மே
2012
10:05
மதுரை:மதுரையில் நேற்று நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதி்ல் லட்சக்கணக்கான பக்தர்கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து தேரோட்டத்தின வீதி உலா இன்று அதிகாலையில் துவங்கியது. மாசி வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தை காண்பதற்கு சுற்றுப்பகுதி கிராமமக்கள் மற்றும் மதுரை மக்கள் திரளாக கூடியிருந்தனர். லட்சக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வழக்கு நம் மண்ணில் காலம் காலமாக வழங்கி வருகிறது. சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடைபெறும். ஒற்றுமையை வலியுறுத்தும் இவ்விழா நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது. நாட்டை ஆளும் மன்னன் நகரை வலம் வருவது போல, இவ்வுலகையே ஆளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர்பவனி நடைபெற்று வந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. 16ம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டியுள்ளார். இப்போது பவனி வரும் தேர்கள் இரண்டும் ராணிமங்கம்மாளின் பேரனான விஜயரெங்கசொக்கநாத நாயக்கரால் (1706-1732) செய்யப்பட்டவை. இரண்டு தேர்களிலும் சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. சுவாமியும், அம்மனும் தேரில் பவனி வரும் போது ஆபரணம் ஏதும் அணிவதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டியி ருப்பர். தேர் பவனி முடிந்த பின் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சியம்மனுக்கும் கிரீடம், ஆபரணங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். காலையில்தேரில் பவனி வரும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் இரவில் சப்தாவர்ண சப்பரத்தில் பவனி வருவர். ருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தி வந்தனர். சிவபெரு மான் தேரேறிப் புறப்பட்டு அவர்களை வதம் செய்து உலகைக் காத்து அருளினார். இப்புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர். 12ம் திருவிழா அன்று ரிஷப வாகனத்தில் ”வாமியும், அம்பாளும் பவனி வருவர். இன்று உச்சிகாலத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.