பதிவு செய்த நாள்
03
மே
2012
10:05
தேனி: கண்ணகி கோயில் செல்லும் தமிழர் பாதுகாப்பிற்காக எஸ்.பி., தலைமையில் 300 போலீசாரும், ஐந்து இடங்களில் அவசர தடுப்பு பிரிவு போலீசாரும் நியமிக்கப்படுகின்றனர். முதன்முறையாக நக்சல் தடுப்பு பிரிவும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா, மே 6ல் நடக்கிறது. பெரியாறு அணை பிரச்னைக்கு பிறகு கேரள, தமிழக பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்பதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரள தரப்பில் 450 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கெங்கு எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற திட்ட விபரம் தேனி மாவட்ட போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பங்கேற்கும் தமிழர்கள் பாதுகாப்பிற்காக, தேனி மாவட்டம் சார்பில், மே 5 மாலை முதல் 6 மாலை வரை, எஸ்.பி., பிரவீண்குமார் அபினபு தலைமையில் 300 போலீசார் நிறுத்தப்படுகின்றனர். கூடுதல் எஸ்.பி., மூன்று டி.எஸ்.பி.,க்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 30 எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார், குமுளி எல்லை பஸ் ஸ்டாண்ட், அம்பாடி ஜங்சன், ஒக்கரை கண்டம் முதல் கேட், கோயில் தீர்த்ததொட்டி ஆகிய இடங்களிலும், கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் நிறுத்தப்பட உள்ளனர். அதேபோல், தமிழர்கள் செல்லும் மற்றொரு பாதையில் பாலமுருகன் கோயில், பளியன்குடி, மூங்கில் ஓடை, அத்தியூத்து ஆகிய இடங்களில் போலீசார் நிறுத்தப்படுகின்றனர். முதன் முறையாக நக்சலைட் தடுப்பிரிவு போலீசார் ,15 பேர் கொண்ட இரு குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தமிழர்களுக்கு கோயிலில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக வதந்தி ஏற்பட்டால், தேனி மாவட்ட மக்கள் கோயிலை நோக்கி செல்லும் அபாயம் உள்ளதாக உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். இதை தடுக்க குமுளி செக்போஸ்ட், லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், கம்பம் மெட்டு பகுதிகளில் அவசர தடுப்பு பிரிவு போலீசார் நிறுத்தப்படுகின்றனர். நவீன ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் வாட்டர் கேன் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா மே 6ல் நடக்கிறது. அன்று காலை 5 மணி முதல் மாலை 3.30 மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் அனைவரும் வெளியேறி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லவும், கோயிலில் சமையல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்கப்படுகிறது. அதனை வாங்கி சாப்பிடலாம். தனியாக சாப்பாடு கொண்டு செல்பவர்கள் பாத்திரங்களில் கொண்டு செல்லலாம். பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. 5 லிட்டர் குடிநீர் பிளாஸ்டிக் கேன் மட்டும் கொண்டு செல்லலாம். காலி வாட்டர் கேனை திருப்பி கொண்டுவந்துவிட வேண்டும்.