மாரியம்மன் திருவிழா கோலாகலம்: கிராம மக்கள் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2020 10:03
ஊட்டி:மஞ்சூர் அருகே, துானேரி, மட்டகண்டி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.மஞ்சூர் அருகே, துானேரி கிராமத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, நாராயண மூர்த்தி கோவில், காலை, 9:00 மணிக்கு, ஊர் தலைவர் போஜன் தலைமையில் திரளான கிராம மக்கள் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக சென்றனர். பின், கொட்டரக்கண்டி பகுதியில் உள்ள கிணற்றில் பால் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கிராம மக்கள் பாரம்பரிய உடை அணிந்து காணிக்கை செலுத்தினர். மட்டக்கண்டி கிராமத்தில் நடந்த மாரியம்மன் திருவிழாவில் ஆடா பகுதியில் உள்ள கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான கிராம மக்கள் பங்கேற்றனர். கோவில் வளாகத்தில் கிராம மக்கள் பாரம்பரிய உடையணிந்து ஆடி, பாடி மகிழ்ந்தனர். ஊர் தலைவர் நஞ்சுண்டராஜ் தலைமையில் கோவில் கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.