தியாகதுருகம்: முடியனூர் ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் மேற்கூரையில் உள்ள நூற்றாண்டு பழமையான மூலிகை வண்ணக் கலவையால் வரையப்பட்ட ஓவியங்களை பாதுகாக்க அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகதுருகம் அடுத்த முடியனூர் கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
திருவண்ணாமலை கோவிலுக்கு நிகரான ஐதீகம் கொண்டதாக இக்கோவில் தல வரலாறு கூறுகிறது. குறிப்பாக கார்த்திகை மாத தீப திருவிழா இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவில் முறையான பராமரிப்பின்றி உள்ளது. பைரவர், சூரியன் சந்நிதி இடிந்து விழும் நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இக்கோயில் அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் 200 ஆண்டுகள் பழமையான சுவாமிகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மூலிகை வண்ணக் கலவையை கொண்டு மிக நுணுக்கமாக கலைநயத்தோடு வரையப்பட்டுள்ளது. கற்கூரையில் சுண்ணாம்பு கலவை பூசி மெருகேற்றி அதன்மீது இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதன்காரணமாக நூற்றாண்டுகளை கடந்தும் இவ் ஓவியங்கள் இங்கு வரும் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மூலிகை வண்ணக்கலவை என்பதால் பூஞ்சாணம், பாக்டீரியா இவைகளால் பாதிக்கப்படாமல் உள்ளது. ஆனால் சுண்ணாம்பு காரைகள் நாளுக்கு நாள் பெயர்ந்து உதிர்ந்து வருகிறது. அதேபோல் மழைக்காலங்களில் மேற்கூரையில் தண்ணீர் கசிவு ஏற்படுவதால் ஓவியங்கள் பொலிவிழந்த நிலையில் காட்சியளிக்கிறது. வரலாற்றுப் பொக்கிஷமாக உள்ள இக்கோவில் ஓவியங்களை தற்போதைய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மெருகேற்றி பாதுகாக்க வேண்டுமென பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இரு நூற்றாண்டுகளை கடந்து காலவெள்ளத்தில் அழிந்து போகாமல் மிச்சமுள்ள ஓவியங்களையாவது முறையாக பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.