திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு, ஏழாம் நாளில் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை பெருமாள் குழந்தை கிருஷ்ணர் அலங்காரத்தில் வெண்ணெய்த்தாழி சேவை தெப்ப மண்டபத்தில் நடைபெறும்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் பிப்.,29ல் துவங்கியது. தினசரி காலையில் திருவீதி புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு உற்ஸவ பெருமாள் மற்றும் தேவியருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. பின்னர் 10:15 மணிக்கு தி.வைரவன்பட்டி ஜோசியர் தெப்பக்குளத்தில் தெப்பத்திற்கு முகூர்த்தக் கால் ஊன்றப்பட்டது. தொடர்ந்து தெப்பம் கட்டும் பணி துவங்கியது. தொடர்ந்து மாலையில் பெருமாள் தங்கப் பல்லக்கில் சூரியஒளியில் திருவீதி புறப்பாடு சென்றார். இன்று காலை 8:00 மணிக்கு திருவீதி புறப்பாடும், இரவில் குதிரை வாகனப்புறப்பாடும் நடைபெறும். நாளை காலை 9:00 மணிக்கு பெருமாள் குழந்தை கிருஷ்ணர் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பாடு துவங்கும்.தொடர்ந்து தெப்பக்குளம் சென்று காலை 10:00 மணி அளவில் முட்டுத் தள்ளுதல் நடைபெறும். பின்னர் தெப்ப மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு 9:30 மணிக்கு திருவீதி புறப்பாடு நடைபெறும்.மார்ச் 9ல் காலை 10:15 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலையில் தீர்த்தவாரி, மாலையில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.