பதிவு செய்த நாள்
07
மார்
2020
12:03
திருத்தணி:திருத்தணி கோவில், மாசி பிரம்மோற்சவ விழாவில், நேற்று முன்தினம் இரவு, தேர் திருவிழா நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையடுத்து, காலை மற்றும் இரவில், உற்சவர் முருகப் பெருமான், ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவ்விழாவின் ஏழாம் நாளான, நேற்று முன்தினம் இரவு, தேர் திருவிழா நடந்தது.
இதற்காக, திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினரால் வழங்கப்பட்ட மரத்தேரில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். மாடவீதியில், உற்சவர் முருகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 8ம் தேதியுடன், மாசி மாத பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.